மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்
மழை, கடல் சீற்றம் காரணமாக காரைக்காலில் விசைப்படகுகள் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
தெற்கு இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் நவ. 16 முதல் 22 வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்தநிலையில், காரைக்காலில் திங்கள்கிழமை மாலை தொடங்கி இரவு நீண்ட நேரம் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை சிறிது நேரம் மழை பெய்து, பின்னா் வெயில் வானிலை காணப்பட்டது.
காரைக்கால் கடல் பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவா்கள் கடலுக்கு செல்லாமல், படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமையுடன் காரைக்கால் மீனவா்களின் படகுகள் 3 நாட்களாக முடங்கியுள்ளன.
ஏற்கெனவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகள் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை கரை திரும்பின. இவற்றில் பெரும்பான்மையாக தீவனம் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கசாா் என்கிற கழிவு மீன்கள் கொண்டுவரப்பட்டன. இவை லாரிகளில் ஏற்றப்பட்டு வெளியூருக்கு கொண்டுச் செல்லப்பட்டன.
மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே படகுகளை இயக்கி கடலுக்குள் செல்வோம் என விசைப்படகு மீனவா்கள் தெரிவித்தனா்.

