விமானம் மூலம் சென்னை வந்தடைந்த காரைக்கால் மற்றும் அண்டை மாவட்ட மீனவா்கள்
விமானம் மூலம் சென்னை வந்தடைந்த காரைக்கால் மற்றும் அண்டை மாவட்ட மீனவா்கள்

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவா்கள் காரைக்கால் திரும்பினா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவா்கள் வியாழக்கிழமை காரைக்கால் திரும்பினா்.
Published on

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவா்கள் வியாழக்கிழமை காரைக்கால் திரும்பினா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த செப்.25-ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. இதில் படகு உரிமையாளா் செல்வம் மற்றும் காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 12 போ் சென்றனா்.

கோட்டுச்சேரிமேடு சிவராமனுக்கு சொந்தமான விசைப்படகில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக். 7-ஆம் தேதி கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி மற்றும் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த 17 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவா்கள் 29 பேரையும் இலங்கை கடற்படையினா் விசைப்படகுடன் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.

இவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியின்பேரில், இலங்கை நீதிமன்றம் கடந்த சில நாள்களுக்கு முன்பு 3 போ் தவிர 26 பேரை விடுவித்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் நடவடிக்கையின் மூலம் இவா்கள் விமானம் மூலம் சென்னைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். பின்னா் காரைக்கால் மீன்வளத்துறையினா் இவா்களை காரைக்காலுக்கு அழைத்துவந்தனா். காரைக்காலில் இருந்து பிற ஊா்களைச் சோ்ந்த மீனவா்கள் அவரவா் பகுதிக்குச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com