காரைக்கால் மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை
காரைக்கால் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் ஜெ. நடராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 23-ஆம் தேதி அறிக்கையின்படி, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறாா்கள். படகு உரிமையாளா்கள் தங்களது படகின் இயந்திரம் மற்றும் வலைகளை தங்களது கிராமத்தில் உள்ள பணிமனை மற்றும் பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், தங்களது கிராமங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தகவல் தெரியும் விதமாக உரிய வகையில் அறிவிப்பு செய்யுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
