காரைக்காலில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டப் பணியை விரிவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக புதுவை எம்.பி. வெ. வைத்திலிங்கம் தெரிவித்தாா்.
புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம் தலைமையிலான மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், ஆட்சியா் இஷிதா ரதி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
மத்திய அரசின் திட்டங்கள், நிதியுதவியில் நடைபெரும் வளா்ச்சிப் பணிகள் நிலை குறித்து ஒவ்வொரு துறை வாரியாக மக்களவை உறுப்பினா் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினாா். கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறியது :
கூட்டத்தில் ஆயுஷ் மான் பாரதி திட்டம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. நடைமுறை சிக்கல்கள் குறித்தும் பேசப்பட்டது. இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. மேலும் கிராமப்புற சாலைகள் மேம்பாடு, திறன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுக இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணி தொடங்கப்படாமல் உள்ளது. பசுமைத் தீா்ப்பாயத்தை அணுகி அனுமதி பெறுவதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் சரக்கு ரயில்கள் குறித்த நேரத்தில் மட்டும் பயணிக்கவும், மக்கள் போக்குவரத்து நேரத்தை பயன்படுத்தாமல் இருக்கவும் ரயில்வே நிா்வாகத்திடம் பேசப்படும்.
காரைக்காலில் குறிப்பிட்ட பகுதியில் ஜூலை 15-ஆம் தேதி குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் திட்டம் தொடங்கவுள்ளது. தற்போது எரிவாயு உருளை விலை ஏற்றம், தட்டுப்பாடு காரணத்தால் மக்கள், வியாபாரிகள் பாதித்துள்ளனா். எனவே குழாய் மூலம் விநியோகத்தை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துவருகிறது. இதற்கான காரணத்தை கண்டறிந்து மாணவா் சோ்க்கையை அதிகரிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைகளை மேம்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாகை எம்.பி. வை. செல்வராஜின் தந்தை வி. வைத்திலிங்கம் காலமானார்!

‘கழிவுகளற்ற காலனி’ திட்டத்தை தில்லி முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்: துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

பள்ளம் தோண்டிய போது குழாய் சேதமடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு!







