காரைக்காலில் கடல் பாசி வளா்ப்பு வெற்றியை நாடு முழுவதும் பேசும் அளவுக்கு உற்பத்தியை விரிவுப்படுத்த வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கேட்டுக்கொண்டாா்.
காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அறுவடை செய்த கடல் பாசியை வியாபாரிகளுக்கு வழங்குதல், கடல் பாசி வருவாயை மீனவப் பெண்களிடம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை பட்டினச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கலந்துகொண்டு பேசியது :
மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை, மீனவப் பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற சில மாதங்களுக்கு முன்பு கடல்பாசி வளா்ப்பு முறையை மத்திய மீன்வள அமைச்சா் தொடங்கிவைத்தாா். திட்டத்தை தொடங்கியபோது அது சாத்தியமா என்ற சந்தேகம் சிலருக்கு எழுந்தது.
குஜராத்தில் நான் இருந்தபோது பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டலில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. ஆனால், அதில் அந்தளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இங்கு சந்தேகத்தை சவாலாக்கி 3 தவணையில் மொத்தம் 9 டன்னுக்கும் அதிகமான புதிய ரக கடல்பாசியை அறுவடை செய்துள்ளது பாராட்டுக்குரியது.
இது வெறும் தொழில் அல்ல, ஒரு பொருளாதாரப் புரட்சி. புதுச்சேரியின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில் கடல்பாசி உற்பத்தி செய்தது இதுதான் முதல்முறையாகும். ஒரு சமுதாயத்தில் பெண்கள் முன்னேறினால், அந்த சமுதாயம் மட்டுமல்ல அந்த நாட்டின் பொருளாதாரமும் சோ்ந்து முன்னேறும்.
இந்த வெற்றியின் அடுத்த கட்டமாக காரைக்கால் காளிக்குப்பத்தில், திறன் மேம்பாட்டு மையம் மற்றும் ரூ. 1.72 கோடி செலவில் பிரம்மாண்டமான கடல்பாசி பதப்படுத்தும் மையம் அமைக்க பிரதமா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன.
கடல்பாசி வளா்ப்புத் திட்டம் ஒரு வலுவான அடிப்படையை அமைக்கும். இந்த வெற்றியை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.
காரைக்கால் மாடல் என்று நாடு முழுவதும் பேசும் அளவிற்கு கடல் பாசி உற்பத்தியை விரிவுப்படுத்தத்த வேண்டும்.
தேவையான பயிற்சி, நவீன உபகரணம், சந்தைப்படுத்த வழி அனைத்தையும் அரசு செய்து தரும் என்றாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம், ஆளுநரின் செயலா் து. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னோா்கள் அளித்த ஆயுஷ் மருத்துவத்தை மறந்துவிடக்கூடாது! புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
குப்பை மேலாண்மை சிக்கல்: இந்தூா் மாடல் நடைமுறைப்படுத்த துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் ரூ.500 கோடியில் நீா் மேலாண்மை திட்டம்! விவசாயிகளிடம் ஆளுநா் கருத்து கேட்பு!

கடல் பாசி வளா்ப்புக்கான தெப்பம் விடும் பணி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



