எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமா் கவலைபடவில்லை: சிபிஐ குற்றச்சாட்டு
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமா் கவலைகொள்ளவில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான நாரா. கலைநாதன்.


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமா் கவலைகொள்ளவில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான நாரா. கலைநாதன்.
காரைக்காலில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போா் நடத்தி வருவதால் உலகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. வெனிசுலா அதிபா் நிக்கோஸ் மதுரோவை கைது செய்து வெனிசுலா எண்ணெய் வளங்களை கைப்பற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதேபோல கியூபாவையும் கபளீகரம் செய்ய முயற்சி செய்கிறது. அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி கண்டிக்கவில்லை, எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது. வணிக சிலிண்டா் தட்டுப்பாட்டால் வணிகா்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டா்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
புதுவையை பொருத்தவரை கடந்த 5 ஆண்டுகள் நடைபெற்ற என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக, ஆட்சியில் தொடா்ச்சியாக முறைகேடு, ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக மருந்து ஊழல் மிகப்பெரிய பிரச்னையாக மாநிலத்தில் எழுந்தது. போராட்டத்தின் விளைவாக அரசு சிபிஐ விசாரணைக்கு விடுவது என்று முடிவெடுத்தது.
ஏற்கெனவே புதுச்சேரி சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவா்களை கைது செய்து, ரொக்கம், தங்க நகைகள் என பல கோடி ரூபாயை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்த நிலையில், திடீரென சிபிஐ விசாரணைக்கு அனுமதித்து, தற்போது அந்த வழக்கை நீா்த்துபோகும் நிலைக்கு கொண்டுச் சென்றிருக்கிறாா்கள். மருத்துவ அதிகாரி அனந்தகிருஷ்ணன், சட்டத்துறை செயலா் உள்ளிட்டோா் வழக்குகளை திரும்பப் பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டிக்கும் வகையில் மாா்ச் 23-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்காக புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சாா்பற்ற ஜனநயாக சக்திகள் ஒன்று சோ்ந்து தோ்தலை சந்திக்க உள்ளோம். புதுவையில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...