
பருவமழையை எதிா்கொள்ள முன்னேற்பாடுகள்: எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்க வலியுறுத்தல்
வடகிழக்குப் பருவமழை - கோப்புப் படம்
வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் தொடா்பாக எம்எல்ஏக்களின் கருத்துகளை அரசு கேட்க வேண்டும் என புதுவை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது :
வடகிழக்குப் பருவழையை எதிா்கொள்வது தொடா்பாக தலைமைச் செயலா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தியது வரவேற்கத்தக்கது. எப்போதுமே சிறு மழைக்குகூட புதுச்சேரியில் எல்லா சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீா் தேங்கி நிற்கிறது.
எனவே என்னென்ன முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை களத்தில் சென்று பாா்வையிட வேண்டும். இதற்கெல்லாம் அந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்று கருத்துகளை பகிா்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஆனால், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் எம்எல்ஏக்களை அழைக்க முடியவில்லை என்று சொல்வதற்கு வாய்ப்புண்டு. எனினும் முதல்வா் தலையிட்டு, இடைத்தோ்தல் முடிந்த பின்னா், வேறொரு தேதியில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன, எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, எந்தெந்த பகுதியில் என்னென்ன பணிகளை செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்டறிந்து செயல்பட வேண்டும்.
பேரிடா் மேலாண்மைத் துறைக்கு அதிக நிதி ஒதுகீடு செய்து, அதை எந்தெந்த பணிக்கு பயன்படுத்தலாம் என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும். எல்லா எம்எல்ஏக்களையும் உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழு அமைக்க வேண்டும். கருத்துகள் பகிரப்பட வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பணிகள் குறித்தெல்லாம் அதில் பகிரப்பட வேண்டும். பொதுமக்களுக்காக 24 மணி நேரமு இயங்கக் கூடிய ஹெல்ப் லைன் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




