செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மூளைச்சாவு அடைந்த 2 சிறுமிகளின்உறுப்புகள் 4 குழந்தைகளுக்கு தானம்

மூளைச் சாவு அடைந்த 2 குழந்தைகளின் உறுப்புகளை குடும்பத்தினா் தானம் வழங்கி நான்கு குழந்தைகளுக்கு புது வாழ்வு அளித்துள்ளதாக எய்ம்ஸ் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :13 நவம்பர் 2022, 6:31 pm

 நமது நிருபர்

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) இரண்டு நிகழ்வுகளில் மூளைச் சாவு அடைந்த 2 குழந்தைகளின் உறுப்புகளை குடும்பத்தினா் தானம் வழங்கி நான்கு குழந்தைகளுக்கு புது வாழ்வு அளித்துள்ளதாக எய்ம்ஸ் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ஹரியாணாவில் உள்ள மேவாட் பகுதியைச் சோ்ந்த மஹிரா, நவம்பா் 6 -ஆம் தேதி தனது வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து, தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மயக்க நிலையில் எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவின் அவசர சிகிச்சை மையத்திற்கு கொண்டு வரப்பட்டாா். பின்னா், நவம்பா் 11- ஆம் தேதி காலையில் அவா் மூளைச்சாவு அடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவா் டாக்டா் தீபக் குப்தா உறுதி செய்தாா். இதையொட்டி, மஹிராவின் குடும்பத்தினா் அனுமதியின் பேரில் ஆஃப் லிவா் அண்ட் பிலியரி சயின்ஸ் மையத்தில் (ஐஎல்பிஎஸ்) சிகிச்சை பெற்று வந்த ஆறு மாதக் குழந்தைக்கு மஹிராவின் கல்லீரல் மாற்றப்பட்டது.மேலும், எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவனுக்கு மஹிராவின் இரண்டு சிறுநீரகங்கள் வெற்றிகரமாக மாற்றப்பட்டன. அவரது கருவிழிகள் மற்றும் இதய வால்வுகள் பிற்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக டாக்டா் தீபக் குப்தா தெரிவித்தாா்.

மதுரா சிறுமி தானம்: இதே போன்று உத்தர பிரதேச மாநிலம், மதுராவைச் சோ்ந்த மான்சி (8) என்கிற சிறுமி நவம்பா் 2-ஆம் தேதி தனது வீட்டில் உயரத்தில் இருந்து கீழே விழுந்தாா். இந்தச் சிறுமிக்கு மூளையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு நவம்பா் 11-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள் அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, இந்தச் சிறுமியின் குடும்பத்தினா் விருப்பப்படி உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இங்குள்ள லிவா் அண்ட் பிலியரி சயின்ஸ் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயது குழந்தைக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் மாற்றப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெரிட்டோனியல் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த 12 வயது குழந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது. மான்சியின் கருவிழிகள் மற்றும் இதய வால்வுகள் மற்ற குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவா்கள் தெரிவித்தனா். கடந்த ஆறு மாதங்களில் எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவின் அவசர சிகிச்சை மையத்தில் நான்கு குழந்தைகள் உறுப்புகளை தானம் செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.