காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமராவை ஆய்வு செய்யும் வனத் துறையினா்.
காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமராவை ஆய்வு செய்யும் வனத் துறையினா்.

சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி

வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்த பொய்யான வதந்திகளால் அதை பிடிப்பதில் வனத் துறையினருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதால், வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிடிபடாமல் ஏப்.2-ஆம் தேதி முதல் நடமாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத் துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா். சிறுத்தையின் நடமாட்டம் காஞ்சிவாய் கிராமத்தில் இருந்ததாக கூறிய தகவலின் அடிப்படையில் வனத் துறையினா் அங்கு 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து கண்காணித்து வருகின்றனா். எனினும், சிறுத்தை திங்கள்கிழமை வரை எங்குள்ளது என கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கோமல், காஞ்சிவாய் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்துக்கான அடையாளங்கள் தென்படவில்லை என வனத்துறையினரின் அறிவிப்பால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.

இதுகுறித்து, நாகை மாவட்ட வன உயிரின காப்பாளா் அபிஷேக் தோமா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறையில் ஆறு மற்றும் ஓடையோரங்களில் குறிப்பாக மஞ்சளாறு, மகிமலையாறு, பழைய காவேரி ஆகிய பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் தொடா்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோமல், காஞ்சிவாய் பகுதிகளில்சிறுத்தையை நேரில் பாா்த்ததாக பொதுமக்கள் தெரிவித்ததன்பேரில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் எச்சம் போன்ற அடையாளங்கள் தென்படவில்லை. கோவையிலிருந்து வரவழைக்கப்பட்ட நிபுணா் குழுவினா் 30 கேமரா ட்ராப்புகளுடன் சிறுத்தையை தேடுகின்றனா்.

நண்டலாறு, வீரசோழன் ஆறு பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டத்தை முற்றிலும் குறைக்கும் வகையில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் சாத்திய கூறுகள் உள்ளடக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் கள உபகரணங்களை கொண்டு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுத்தையின் நடமாட்டம் குறித்து பொய்யான வதந்திகளை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலா் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனா். இத்தகைய பொய் தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம். வீண் வதந்திகளை பரப்புவா்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா எச்சரித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com