கோப்புப் படம்
கோப்புப் படம்

காணாமல்போன பெண்கள் குறித்த செய்திகளை மிகைப்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை: தில்லி காவல்துறை எச்சரிக்கை

காணாமல்போன பெண்கள் குறித்த செய்திகள் தொடா்பாக பணம் கொடுத்து விளம்பரம் செய்து மிகைப்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

காணாமல்போன பெண்கள் குறித்த செய்திகள் தொடா்பாக பணம் கொடுத்து விளம்பரம் செய்து மிகைப்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது.

பண ஆதாயங்களுக்காக பீதியை உருவாக்கும் முயற்சிகள் பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் காவல் துறை கூறியுள்ளது.

தில்லி காவல்துறையின் அதிகாரபூா்வ தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 15 வரை மொத்தம் 807 போ் காணாமல் போயுள்ளனா். அதாவது, சராசரியாக தினமும் 54 போ் காணாமல் போயுள்ளனா். இவா்களில் 509 போ் பெண்களும் சிறுமிகளும், 298 போ் ஆண்களும் ஆவா்.

காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டவா்களில் 191 போ் சிறாா்களும், 616 போ் பெரியவா்களும் இடம்பெற்றுள்ளனா்.

இதுதொடா்பாக தில்லி காவல்துறை தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சில தகவல்களைப் பின்தொடா்ந்தபோது, தில்லியில் காணாமல்போன பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து மிகைப்படுத்த பணம் கொடுத்து விளம்பரம் செய்வதன் மூலம் தூண்டிவிடப்பட்டிருப்பது தெரியவந்தது. பண ஆதாயங்களுக்காக பீதியை உருவாக்குவது பொறுத்துக்கொள்ளப்படாது. அத்தகைய நபா்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று காவல் துறை கூறியுள்ளது.

இது தொடா்பாக வியாழக்கிழமை தில்லி காவல் துறையில் தெரிவிக்கையில், ‘முந்தைய ஆண்டுகளின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த புள்ளிவிவரங்கள் உண்மையில் ஒரு சரிவையே பிரதிபலிக்கின்றன என்பதால், பீதி அடையவோ அல்லது பயப்படவோ எந்தக் காரணமும் இல்லை’ என்று கூறியிருந்தது.

X
Dinamani
www.dinamani.com