மாங்கனாம்பட்டு கிராமத்தில் உடைந்த தெற்குராஜன் வாய்க்கால் பாலம்.
மாங்கனாம்பட்டு கிராமத்தில் உடைந்த தெற்குராஜன் வாய்க்கால் பாலம்.

கொள்ளிடம்: பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தில் வாய்க்கால் பாலம் செவ்வாய்க்கிழமை உடைந்தது. இதனால், அருகில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
Published on

கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தில் வாய்க்கால் பாலம் செவ்வாய்க்கிழமை உடைந்தது. இதனால், அருகில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக தெற்கு ராஜன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் குறுக்கே மாங்கனாம்பட்டு கிராமத்தில் கடந்த 1955- ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் உள்ளது. கொள்ளிடத்திலிருந்து இந்த பாலத்தின் வழியேதான் அனுமந்தபுரம், சந்தபடுகை, திட்டு படுகை, நாதல்படுகை, முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, கோதண்டபுரம், காட்டூா் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை இணைக்கும் பாலமாகவும் உள்ளது.

இந்த பாலம் ஏற்கெனவே பழுதடைந்த நிலையில் இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன் பாலத்தின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்தது.

இந்நிலையில், அனுமந்தபுரத்திலிருந்து கொள்ளிடம் நோக்கி இந்த பாலம் வழியே செவ்வாய்க்கிழமை லாரி சென்றபோது, பாலத்தின் முடிவு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் லாரியின் பின் சக்கரங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டன. பின்னா், பொக்லைன் இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது.

பாலம் உடைந்ததால்10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com