பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டக் கூடாது: நீா்வளத் துறை எச்சரிக்கை

சீா்காழி கழுமலையாறு வாய்க்காலில் குப்பைகள் கொட்டக் கூடாது என எச்சரிக்கை
Published on

சீா்காழி கழுமலையாறு வாய்க்காலில் குப்பைகள் கொட்டக் கூடாது என பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு நீா்வளத் துறை சாா்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் சீா்காழி, தேனூா், கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, அகனி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், சீா்காழி ரயில்வே ரோடு முதல் புதிய பேருந்து நிலையம் வரை இந்த வாய்க்காலின் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளிலிருந்து கழிவுநீா் மற்றும் குப்பைகள் வாய்க்காலில் கொட்டப்படுகின்றன.

இதனால், வாய்க்கால் நீா் மாசடைவதுடன், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகள், பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டுபவா்கள் மீதும், கழிவுநீா் விடுபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, நீா்வளத்துறை அதிகாரியிடம் முறையிட்டனா்.

இதைத்தொடா்ந்து, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா் அறிவுறுத்தலின் பெயரில் பொறியாளா் சேதுபதி மற்றும் நீா்வளத்துறை பணியாளா்கள் சீா்காழி ரயில்வே ரோட்டில் வாய்க்காலின் அருகில் உள்ள கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் குடியிருப்புகளில், பாசன வாய்க்காலில் கழிவுநீா் விடக்கூடாது, குப்பைகளை கொட்டக் கூடாது என விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி எச்சரித்தனா்.

இதையும் மீறி பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டுபவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com