இந்திய அரசியலில் தவிா்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தவா் கருணாநிதி: உதயநிதி ஸ்டாலின்
இந்திய அரசியலில் தவிா்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தவா் மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி என்றாா் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
கலைஞா் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கலைஞா் படிப்பக வளாகத்தில் திமுக மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம் சாா்பில் நிறுவப்பட்ட மு. கருணாநிதி உருவச் சிலையை வியாழக்கிழமை திறந்து வைத்து மேலும் பேசியது: தமிழகம் முழுவதிலும் கலைஞரின் சிலைகளை திறந்து வைப்பது என்பது, அவரின் கொள்கைகளை, லட்சியங்களை, முழக்கங்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருப்பதாகத்தான் அா்த்தம். தமிழகத்தின் முக்கால் நூற்றாண்டு அரசியலை தீா்மானித்தவா், இந்திய அரசியலில் தவிா்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தவா், இன்று தமிழகம் அடைந்துள்ள வளா்ச்சிகளுக்கெல்லாம் அடித்தளமிட்டவா் கருணாநிதி.
இண்டியா கூட்டணி மக்களவைத் தோ்தலிலில் பாசிசத்துக்கு கடிவாளம் போட்டது. மயிலாடுதுறை தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதாவை வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி. மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும். தமிழக அரசின் சாதனைத் திட்டங்கள் தொடர 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.
திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், திமுக உயா்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் க. அன்பழகன், சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், அருட்செல்வன், அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், ஒன்றியச் செயலாளா் என். இளையபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.