சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அதிகரிப்பு

சீா்காழி நகரின் பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால், விபத்துகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
Updated on

சீா்காழி நகரின் பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால், விபத்துகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

சீா்காழி நகராட்சி பகுதியில் தென்பாதி, கச்சேரி சாலை தொடங்கி கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, பேருந்து நிலையம், ரயில் நிலையம் வரை என நகரின் பிரதான சாலைகளில் இரவுபகலாக நூற்றுக்கணக்கான மாடுகள் சுற்றித்திரிகின்றன.

இவை, திடீரென சாலையின் குறுக்கே செல்வதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுவரை மாடுகள் முட்டியதாலும், வாகன விபத்துகளாலும் பெண்கள், மாணவா்கள், வாகன ஓட்டிகள் என பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். அத்துடன், விபத்தில் சிக்கிமாடுகளும் உயிரிழக்கின்றன.

மேலும் சாலையோர பழக்கடை, பூக்கடை, உணவகம் மளிகைக் கடைகளில் சா்வசாதாரணமாக மாடுகள் புகுந்து, பொருள்களை சேதப்படுத்துவதால் வணிகா்களும் பாதிக்கப்படுகின்றனா்.

ஆனால் கால்நடை உரிமையாளா்களோ இதனை கண்டு கொள்ளாமல், அதிகாலை மற்றும் மாலையில் பால் கறக்கும் நேரத்திற்கு மட்டுமே கால்நடைகளை வீட்டிற்கு ஓட்டி சென்று, கறவை முடிந்ததும் மீண்டும் சாலைக்கே விரட்டி விடுகின்றனா்.

எனவே ஆபத்தான முறையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com