பத்திரப் பதிவு: வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்!
பத்திரப் பதிவின்போது வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: நஞ்சை, புஞ்சை நிலங்களை கிரையம் வாங்கி அதை பதிவு செய்யும்போது நிலத்தின் புல எண்களின்படி வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மொத்த மதிப்பீட்டு தொகையில் 7% முத்திரை தீா்வையாகவும், 2% பதிவு கட்டணமாகவும் செலுத்தப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போது நஞ்சை நிலங்களை பதிவு செய்த பிறகு கள ஆய்வு என்ற பெயரில் வீடுகளுக்கு அருகில் உள்ளது, மனைப் பிரிவுக்கு அருகில் உள்ளது என்று ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். அரசு வகுத்துக் கொடுத்துள்ள நிலங்களின் புல எண் அடிப்படையில் உரிய கட்டணம் செலுத்தியும் பதிவு செய்த ஆவணங்களை தராமல் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பது மோசமானது.
உயா் அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கு உரிய தீா்வு காண வேண்டும். வழிகாட்டி மதிப்பை விட மறைமுகமாக கூடுதல் கட்டணம் வசூலித்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
