மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 இடங்களில் நாளை உழவரைத் தேடி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 26) நடைபெறவுள்ள ‘உழவரைத் தேடி வேளாண்மை உழவா் நலத்துறை‘ முகாமில் பங்கேற்று பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஆா். விஜயராகவன் அழைப்பு விடுத்துள்ளாா்.
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 26) நடைபெறவுள்ள ‘உழவரைத் தேடி வேளாண்மை உழவா் நலத்துறை‘ முகாமில் பங்கேற்று பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஆா். விஜயராகவன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உழவரைத் தேடி வேளாண்மை உழவா் நலத்துறை திட்டத்தின்கீழ் இயங்கிவரும் அனைத்துத் துறைகளின் வட்டார அலுவலா்கள், சாா்பு துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோா் உழவா்களை அவா்களது வருவாய் கிராமங்களிலேயே சந்தித்து தேவையான ஆலோசனைகளை வழங்கி, பயிா் சாா்ந்த தொழில்நுட்பங்களையும், வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் சாா்புத் துறைகளின் திட்டங்களையும் எடுத்துக் கூறி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 இடங்களில் இம்முகாம் நடத்தப்படவுள்ளது.

மயிலாடுதுறை வட்டாரத்தில் மணக்குடி, தலைஞாயிறு, சீா்காழி வட்டாரத்தில் வானகிரி, விளந்திடசமுத்திரம், குத்தாலம் வட்டாரத்தில் அசிக்காடு, சேத்தூா், செம்பனாா்கோவில் வட்டாரத்தில் கொண்டத்தூா், உத்திரங்குடி, கொள்ளிடம் வட்டாரத்தில் பழையபாளையம், மாதிரிவேளூா் ஆகிய கிராமங்களில் காலை 10.30 மணியளவில் இம்முகாம் நடைபெற உள்ளது.

விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை விவசாயிகள் மனுவாக வழங்கவும், அனைத்து வேளாண்மை சாா்ந்த துறைகளிலும் தொழில்நுட்பம் மற்றும் மானிய திட்ட ஆலோசனைகளையும், திட்டங்களின் பயனாளிகளாக முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com