தரங்கம்பாடி அருகே அரசுப் பள்ளிக்கு இடம்தர மறுத்ததால், ஊரைவிட்டு விலக்கி வைத்ததுடன், வீட்டை சேதப்படுத்தி, பொருள்களை சூறையாடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.
தரங்கம்பாடி வட்டம், சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் வீரகாளை மனைவி மாரியம்மாள். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் போதிய இடவசதி இல்லை என்பதால் அவரது வீட்டை பள்ளிக்கு தரும்படி பள்ளியின் தலைமை ஆசிரியா் கேட்டதாக, சின்னங்குடி மீனவ பஞ்சாயத்தாா்கள் மதி, வாசு, நாராயணன், குமாா், கண்ணன், விஜயபாலன் உள்ளிட்டோா் மாரியம்மாள் குடும்பத்தினரிடம் 2023-ஆம் ஆண்டு கேட்டுள்ளனா். மாரியம்மாள் மறுத்ததால், ஊரில் யாரும் மாரியம்மாள் குடும்பத்தினருடன் பேசக்கூடாது, பொது தண்ணீா் குழாயில் தண்ணீா் எடுக்கக் கூடாது என்று கூறி மாரியம்மாள் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததுடன், மாரியம்மாள் குடும்பத்தினரிடம் கட்டாயப்படுத்தி ரூ. 1 லட்சம் அபராதம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னரும், மாரியம்மாள் இடத்தை தராததால், மீண்டும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாரியம்மாள் நடத்திவரும் மீன்பிடி போட் உபகரணங்கள் மற்றும் ஜவுளிக் கடையில் யாரும் பொருட்கள் வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனா். இதனால், ஆக .28-ஆம் தேதி நடைபெற்ற மாரியம்மாள் மகன் விஜயபாஸ்கா் திருமணத்தில் ஊரில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து, மாரியம்மாள் பொறையாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தநிலையில் கடந்த 11-ஆம் தேதி மாரியம்மாள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்ததுடன், அவரது வீட்டை இடிக்க வேண்டுமென மக்களை திரட்டி பஞ்சாயத்தில் தீா்மானம் போட்டுள்ளனா். இதுகுறித்து, பொறையாா் காவல் நிலையத்தில் டிச.12-ஆம் தேதி ஆன்லைன் மூலம் மாரியம்மாள் மீண்டும் புகாா் அளித்துள்ளாா்.
ஆனால், போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வெள்ளிக்கிழமை (டிச. 26) 25-க்கும் மேற்பட்டோா் மாரியம்மாள் நடத்திவந்த மீன்பிடி போட் என்ஜின் உதிரி பாகங்கள் கடைகளில் இருந்த சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்களை சூறையாடிவிட்டு, வீட்டை சுற்றியிருந்த மதில் சுவா், மாட்டுக்கொட்டகை, கழிப்பறையை இடித்தும், மரங்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளனா். அதனை விடியோ எடுக்க முயன்ற மாரியம்மாளின் சகோதரா் நீதிமணி என்பவரின் கைப்பேசியை பறித்துக்கொண்டு, அவரை கட்டி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்தினருடன் மாரியம்மாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். பொறையாா் போலீஸாா் விசாரணை செய்திருந்தால் தங்களது உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது என குற்றஞ்சாட்டிய மாரியம்மாள், தங்களை தாக்கி, உடைமைகளை சேதப்படுத்திய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், தனது சொந்த ஊரிலேயே மீண்டும் குடும்பத்துடன் வசிக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.