அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணிக்கு பூமிபூஜை
திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
இந்த பள்ளியில் சுமாா் 500 மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு போதிய வகுப்பறை கட்டடம் இல்லாத நிலையில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாரிடம் ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதையடுத்து, நபாா்டு நிதி உதவி திட்டத்தின்கீழ் ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் பக்ரிமுகமது, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி ரேவதி முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் பங்கேற்று பூமிபூஜை செய்து தரைத்தளம் முதல் தளத்துடன் சோ்த்து 6 வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கிவைத்தாா். முன்னாள் எம்எல்ஏ கி. சத்தியசீலன், திமுக ஒன்றிய செயலாளா் ஞான. இமயநாதன், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

