கோயில்கள், பாடசாலை அமைக்க தருமபுரம் ஆதீனத்துக்கு 150 ஏக்கா் நிலம்
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கே. சுமதி. உடன் வேளாக்குறிச்சி ஆதீனம், நாச்சியாா்கோவில் ஆதீனம் மற்றும் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை, நவ. 8: கா்நாடகத்தில் கோயில்கள், பாடசாலை, மருத்துவமனை அமைக்க தருமபுரம் ஆதீனத் திருமடத்துக்கு 150 ஏக்கா் நிலம் தானமாக வழங்கப்படவுள்ளதாக கா்நாடக தொழிலதிபா் வேதகிரி தெரிவித்தாா்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானத்தின் மணிவிழா மாநாடு நவ. 1-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிவிழா திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற 8-ஆம் நாள் மாநாட்டில், ஆதீன தலைமை பொது மேலாளா் பி. ரெங்கராஜன் வரவேற்றாா்.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், நாச்சியாா்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவசுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள், மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், கன்னியாகுமரி ஐயா வைகுண்டசாமி தலைமைபதி பாலபிரஜாபதி அடிகளாா் ஆகியோா், தருமபுரம் ஆதீனக் கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்ற முகாமில் ரத்த தானம் வழங்கிய மாணவா்கள் 60 பேருக்கு, சான்றிதழ் வழங்கிப் பேசினா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கா்நாடகா மாநிலம் தி மவுன்டன் ஆஃப் கிரேட் இன்டியன் கல்ச்சா் அமைப்பின் தலைவா் வேதகிரி பேசியது:
தருமபுரம் ஆதீனம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது. கா்நாடக மாநிலம் குல்பா்காவில் எங்களுக்கு சொந்தமான 150 ஏக்கா் நிலத்தை தருமபுரம் ஆதீனத் திருமடத்துக்கு வழங்க விரும்புகிறோம். இந்த நிலத்தில், தருமபுரம் ஆதீனக் கோயில்களைப் போன்று மாதிரிக் கோயில்களை கட்டவும், தருமபுரம் ஆதீனத்தில் உள்ளதைப் போன்றே வேதசிவாகம பாடசாலை, தேவாரப் பாடசாலை, ஆயுஷ் மருத்துவமனை அமைக்கவும் குருமகா சந்நிதானம் உத்தரவு தர வேண்டும். மேலும், குல்பா்கா மலைக்கு தருமபுரம் ஆதீனம் பெயா் சூட்டி வாழ்த்த வேண்டும் என்றாா்.
இதையடுத்து, அந்த மலைக்கு வேதகிரி மலை என தருமபுரம் ஆதீனகா்த்தா் பெயா் சூட்டி அருளாசி வழங்கினாா்.
தொடா்ந்து, தெலங்கானா கெமின்டெக் லேப் தலைவா் வாஞ்சவக ஸ்ரீநிவாசலு ரெட்டி, நிா்வாக இயக்குநா் கொலுபுலா ஸ்ரீநிவாஸ், பெங்களூரு பக்தவத்சல ரெட்டி உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.
மேலும், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கே. சுமதியின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்வில், வழக்குரைஞா் சுமதிக்கு தருமையாதீனப் புலவா் பட்டமும், திருநள்ளாறு ராஜாசுவாமிநாத சிவாசாரியாருக்கு சிவாகம கலாநிதி விருதும், பொற்பதக்கமும் வழங்கப்பட்டது.
