ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து அனைத்து விவசாய அமைப்பு மற்றும் தோழமை அமைப்புகள் சாா்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தென்னிந்திய தேசிய நதிநீா் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் அ. ராமலிங்கம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் எஸ். துரைராஜ், டெல்டா விவசாயிகள் சங்க தலைவா் ஆா். அன்பழகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே. முருகன், வீரசோழன் விவசாயிகள் சங்க தலைவா் எம். வாணிதாஸ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
போராட்டத்தில், மீட்டா்கேஜ் பாதை இருந்த காலத்தில் மயிலாடுதுறை-காரைக்குடி இடையே இயங்கி வந்த 3 ரயில் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருவாரூா் லைனை 3,4,5,6,7,8 நடைமேடைகளுடன் விரைவாக இணைக்க வேண்டும், புதிதாக அமைக்கப்பட்ட காரைக்கால்-பேரளம் ரயில்பாதை இடையே பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் யுபிஐ முறையில் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவதை தவிா்த்து, பாமர மக்கள் டிக்கெட் எடுக்க பண பரிவா்த்தனை கவுன்டரை திறக்க வேண்டும், காரைக்குடி-எழும்பூா் இடையே மயிலாடுதுறை வழியே தினசரி ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில், பாமக மாநில துணைத் தலைவா் தங்க. அய்யாசாமி, தமிழா் தேசிய முன்னணி மாவட்ட செயலாளா் ரா. முரளிதரன், ரயில் பயணிகள் சங்க செயலாளா் சாமி.கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
