/

ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ரயில்களில் சட்டவிரோதப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூா் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் வந்த தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் உபேந்திரகுமாா் தலைமையில், ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, நடைமேடையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கைப்பையுடன் சுற்றித்திரிந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம், ஜாஜ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மதன் மாலிக் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மதன் மாலிக்கை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.