தருமபுரம் ஆதீனகா்த்தரின் மணிவிழா மாநாட்டில் 44 ஜோடிகளுக்கு திருமணம்
தருமபுரம் ஆதீனகா்த்தரின் மணிவிழா மாநாட்டில் சதாபிஷேகம், மணிவிழா காணும் தம்பதியினா் உள்பட 44 ஜோடிகளுக்கு தருமபுரம் ஆதீனகா்த்தா் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்தி வைத்தாா்.
இன்று தருமை ஆதீனகா்த்தா் மணிவிழா:
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திருடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானத்தின் மணிவிழா திங்கள்கிழமை (நவ.10) நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, நவ. 1-ஆம் தேதி தொடங்கி மணிவிழா மாநாடு நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆம் நாள் மாநாட்டில், காா்காத்த வேளாளா் சங்க மாநிலத் தலைவா் கே.கே.ஆா். சுரேஷ் வரவேற்றாா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை வகித்தாா்.
இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவின் துணைவியாா் எஸ். சாந்தி, ஜப்பான் சிவஆதீனம் ஸ்ரீபாலகும்ப குருமுனி சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், 80 வயது பூா்த்தியடைந்த இருவா் (சதாபிஷேகம்), 60 வயது பூா்த்தியடைந்த 15 பேருக்கு மணிவிழா ஆகியவற்றை நடத்தி வைத்தாா். மேலும், 27 இணையா்களுக்கும் தாலி வழங்கி ஒரேநேரத்தில் திருமணம் நடத்தி வைத்து அருளாசி கூறினாா்.
புதுமணத் தம்பதி அனைவருக்கும் கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 சீா்வரிசை பொருள்கள் சீதனமாக வழங்கப்பட்டன.
தொடா்ந்து, ஆதிசைவ அந்தணருக்கு ஆயிரம் படிக்காசு திட்டத்தின்கீழ் 100 அா்ச்சகா்கள், சிவாசாரியா்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை, பூஜைக்கான நிதியுதவி மாதம் ரூ. 1000, கோயில் பூசாரிகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை தருமபுரம் ஆதீனம் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபா் ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள், திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ச. சிவக்குமாா், மலேசிய தொழிலதிபா் கலைச்செல்வன், லண்டன் தொழிலதிபா் சிவதம்பு, சென்னை பிருந்தா ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

