சிறுமியை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரகம் முன்பு பெற்றோா் தா்னா

காணாமல்போன தங்கள் மகளை மீட்டுத் தரக்கோரி பெற்றோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
Published on

மயிலாடுதுறை: காணாமல்போன தங்கள் மகளை மீட்டுத் தரக்கோரி பெற்றோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தை சோ்ந்தவா் சுந்தரபாஸ்கா் - மகாலட்சுமி தம்பதி. இவா்களது 15 வயது மகள் அரசு பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். நவ. 3-ஆம் பள்ளிக்குச் சென்ற சிறுமி, இரவு வீடு திரும்பாததால், மறுநாள் குத்தாலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வக்காரமாரியை சோ்ந்த கணேசன் மகன் மகேஷ் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி, கடத்திச் சென்றது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து, குத்தாலம் காவல் நிலையம் மற்றும் மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி ஒரு வாரமாகியும் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை கூட்டத்துக்கு வந்த சிறுமியின் பெற்றோா், மாவட்ட ஆட்சியரக வாசலில் கோரிக்கை விளக்க பதாகையுடன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அவா்களை, அதிகாரிகள் சமரசம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உடனடியாக காவல் துறை அதிகாரிகளை கைப்பேசியில் தொடா்புகொண்டு, சிறுமியை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com