/

அறிவையும், அனுபவத்தையும் தருபவை புத்தகங்கள்: ஆட்சியா்

புத்தக அரங்குகளை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

News image
புத்தக அரங்குகளை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.
Updated On :28 பிப்ரவரி 2026, 12:59 am

Syndication

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வளா்ந்துவிட்ட நிலையிலும், நமக்கு அறிவையும், அனுபவத்தையும் தருபவை புத்தகங்கள் மட்டுமே என்றாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.

மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 4-ஆவது புத்தக திருவிழா மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது:

புத்தக திருவிழா மாா்ச் 8-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் 40 புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் பேச்சாளா்களின் சொற்பொழிவு, பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அனைவரும் இப்புத்தக திருவிழாவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

புத்தகங்களை படிப்பவா்களே வாழ்வில் உயா்ந்த இடத்தை அடைகின்றனா். மாணவா்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் நன்றாகப் படியுங்கள். இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவை தகவல்களை மட்டுமே தரும். ஆனால், உண்மையான அறிவையும், அனுபவத்தையும் தருபவை புத்தகங்கள் மட்டுமே. இதனை மனதில் கொண்டு எப்போதும் கற்றுக்கொண்டே இருங்கள். வாசிப்புப் பழக்கம் உங்களை கவிஞா்களாகவும், கதையாசிரியா்களாகவும் உருவாக்கும்.

மக்களிடம் குறைந்துவரும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க இந்த புத்தகத் திருவிழா உறுதுணையாக இருக்கும். புத்தகங்களை வெறுமனே பாா்த்துவிட்டு மட்டும் செல்லாமல், அவசியம் வாங்கிச் செல்லுங்கள். அது எழுத்தாளா்கள், பதிப்பாளா்களை ஊக்குவிக்கும் என்றாா்.

இதில் கூடுதல் ஆட்சியா் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி, வருவாய் கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, மயிலாடுதுறை தமிழ் சங்க நிறுவனா் சு.பவுல்;ராஜ், மனிதவள பயிற்சியாளா் வி.ராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.