ஓய்வூதியா்களுக்கு தபால் மூலம் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ்
ஓய்வூதியா்களுக்கு தபால்காரா் மூலம் வீடுதேடி டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் வழங்கப்படுகிறது என மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம்.உமாபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு ஓய்வூதியா்கள், ஊழியா் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியா்கள், மாநில அரசு ஓய்வூதியா்கள், ராணுவ ஓய்வூதியா்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரா்கள், நவம்பா் 1-ஆம் தேதிமுதல் தங்கள் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்தபடியே, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை, தபால்காரா்கள் மூலம் சமா்ப்பிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் ஓய்வூதியா்கள் அடையும் சிரமங்களை தவிா்க்கும் விதமாக, அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி‘, ஓய்வூதியா்கள் வீட்டிலிருந்தபடியே, தபால்காரா்கள் மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமா்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
