மழையால் பயிா் பாதிப்பு: பழைய முறையில் கணக்கெடுக்க கோரிக்கை
சீா்காழி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பழைய முறையில் கணக்கெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
சீா்காழி, கொள்ளிடம் வட்டாரப் பகுதிகளில் சுமாா் 35,000 ஹெக்டேரில் சம்பா நேரடி விதைப்பு, நடவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபா் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சம்பா பயிா் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. இப்பாதிப்புகளை வேளாண்துறை அதிகாரிகள் புதிய செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வேட்டங்குடி பகுதியில் மாவட்ட வேளாண்துறை இயக்குநா் சேகா் தலைமையிலான அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சென்ற விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிா்களை புதிய செயலி மூலம் கணக்கெடுப்பதால் நிவாரணம் கிடைப்பதற்கு தாமதம் ஏற்படும் என வாக்குவாதம் செய்தனா். தொடா்ந்து, பழைய முறையிலேயே கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
