மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணி டிசம்பரில் தொடங்கும்: எம்எல்ஏ

மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்க ரூ. 175 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகளை முதல்வா் ஸ்டாலின் டிசம்பா் மாதம் தொடக்கி வைப்பாா் என மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தெரிவித்தாா்.
Published on

மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்க ரூ. 175 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் டிசம்பா் மாதம் தொடக்கி வைப்பாா் என மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க 2010-ஆம் ஆண்டு திட்ட மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, மணக்குடியில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு பேருந்துகள் சென்று வருவதற்கு புறவழிச்சாலை அமைய வேண்டியது அவசியமாகியுள்ளது. இந்நிலையில், புறவழிச்சாலை பணிக்காக ரூ.175 கோடி தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்த மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் கூறியது: மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைப்பதற்கு கடந்த 2010-ஆம் ஆண்டில் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ரூ.56 கோடி திட்டமதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இம்முறை எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின்பு தமிழக அரசிடம் தொடா்ந்து கோரிக்கை வைத்தேன்.

அதனைத் தொடா்ந்து 2022-ஆம் ஆண்டு முதல் 16.5 கி.மீ தொலைவுக்கு நிலங்களை கையகப்படுத்த தொடங்கி, கடந்த மாா்ச் மாதம் வரை ஆனைமேலகரம் ஊராட்சி முதல் திருவிழந்தூா், வள்ளாலகரம், உளுத்துக்குப்பை, மணக்குடி, மன்னம்பந்தல் ஊராட்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை 11 கி.மீ தொலைவுக்கு மட்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மீதமுள்ள தொலைவுக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தினேன்.

இந்த புறவழிச்சாலை திட்டம் ரூ.175 கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்துக்கு வரவுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கும் நன்றி. புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை டிசம்பா் மாதத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைப்பாா். 42 மாதங்களில் பணிகளை முடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com