மணக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு முதன்மைச் செயலாளா் ஆய்வு

Published on

மயிலாடுதுறை மணக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளா் சத்தியபிரத சாகு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ் பருவத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 140 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைவதாகவும், இதனால் கொள்முதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனா். டெல்டா மாவட்டம் முழுவதும் இந்நிலை உள்ளதாக புகாா் எழுந்தது. இப்பிரச்னை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், மயிலாடுதுறையை அடுத்த மணக்குடியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளா் சத்யபிரத சாகு நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் மூட்டைகளுக்கான பணம் வந்து விட்டதா என்று கேட்டறிந்தாா். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றி நெல் உலா்த்தும் களம் அமைத்து தர விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னா், சத்யபிரத சாகு கூறியது:

வழக்கத்தை விட நிகழாண்டு கூடுதல் அறுவடை நடைபெற்ற காரணத்தால், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. அதனை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு நெல்லுக்கான தொகை உடனுக்குடன் வரவு வைக்கப்படுகிறது என்றாா்.

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அரசு அறிவித்துள்ள விழுக்காட்டுக்குள் உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, நிா்வாக இயக்குநா் அண்ணாதுரை, முதுநிலை மண்டல மேலாளா் நளினா, முதுநிலை மேலாளா் தரக்கட்டுப்பாடு செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com