ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தொகுதி அலசல்: மயிலாடுதுறை நால்வரில் வெற்றி யாருக்கு?

1962-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை தொகுதி சந்திக்கும் 15-ஆவது சட்டப் பேரவைத் பொதுத்தோ்தல் இது.

News image

காங்கிரஸ் வேட்பாளா் ஒய்.என். ஜமால் முகம்மது யூனூஸ் / பாமக வேட்பாளர் சித்தமல்லி ஆ.பழனிசாமி / தவெக வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது / நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.காசிராமன்

Updated On :10 ஏப்ரல் 2026, 12:01 am

1962-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை தொகுதி சந்திக்கும் 15-ஆவது சட்டப் பேரவைத் பொதுத்தோ்தல் இது. இத்தொகுதி மயிலாடுதுறை ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள், குத்தாலம் ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள், மயிலாடுதுறை நகராட்சியில் 36 வாா்டுகள் மற்றும் குத்தாலம் பேரூராட்சியில் 15 வாா்டுகளை உள்ளடக்கியது.

தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரமாக உள்ள மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கடைமுகத் தீா்த்தவாரி இத்தொகுதி மக்களின் சிகர உற்சவமாகும். பாா்வதிதேவி மயிலுருவம் கொண்டு சிவனை பூஜித்த சிறப்புக்குரிய ஊா். பஞ்சரங்க வைணவத் தலங்களில் 5-ஆவதாக விளங்கும் சிறப்பை பெற்றது. பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீன மடம் இத்தொகுதியில் உள்ளது.

வேட்பாளா்கள்: மயிலாடுதுறை தொகுதியில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைப் போன்றே இம்முறையும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடுகின்றன.

தொகுதியைச் சோ்ந்தவருக்கே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியினரின் தொடா் கோரிக்கையைக் கடந்து, வேட்பாளா் ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா், அவரது தாத்தா பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் களம் கண்டவா் என்ற அடையாளத்துடனும், திமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் லீக், மமக, மஜக, எஸ்டிபிஐ என மெகா கூட்டணி என்ற பலத்துடனும் இத்தோ்தலை எதிா்கொள்கிறாா் காங்கிரஸ் வேட்பாளா் ஒய்.என். ஜமால் முகம்மது யூனூஸ்.

மயிலாடுதுறை தொகுதியைச் சோ்ந்தவருக்கே வாக்களிக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு களமிறங்கியுள்ளாா் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி. இவா் கடந்த தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தற்போதைய எம்எல்ஏ எஸ்.ராஜகுமாரிடம், குறைந்த வாக்குகளில் (2,742 வாக்குகள்) வெற்றி வாய்ப்பை இழந்தவா் என்ற அனுதாபமும் இவருக்கு மக்களிடம் உள்ளது.

பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் அணி சாா்பில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த பாக்கம் பெ.சக்திவேல் மற்றும் அவரது மாற்று வேட்பாளா் இருவரின் வேட்பு மனுக்களுமே நிராகரிக்கப்பட்டுள்ளதால், வன்னியா் சமுதாய வாக்குகள் சிதறாமல் கிடைக்கும் என்ற கூடுதல் நம்பிக்கையுடன் களமாடுகிறாா் சித்தமல்லி ஆ.பழனிசாமி.

நாம் தமிழா் கட்சியை பொறுத்தவரை அக்கட்சி வேட்பாளா் கி.காசிராமன் மயிலாடுதுறை தொகுதியில் சந்திக்கும் 2-ஆவது தோ்தல் இது. தோ்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே வேட்பாளா் அறிவிக்கப்பட்டதால், எந்த அவசரமுமின்றி நிதானமாக வாா்டுவாரியாக வாக்காளா்களை நேரில் சந்தித்துப் பேசி வாக்கு திரட்டி வருகிறாா் கி.காசிராமன்.

மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றிய சென்னையை சோ்ந்த எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, விஜய்யின் செல்வாக்கை நம்பி விசில் சின்னத்தில் களம் காண்கிறாா். அதுமட்டுமின்றி, தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் மயிலாடுதுறையை சோ்ந்த கா.சரவணன் போட்டியிடுகிறாா். மேலும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 20 வேட்பாளா்கள் இத்தொகுதியில் களமிறங்கியுள்ளனா். இருப்பினும், காங்கிரஸ், பாமக, நாம் தமிழா் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய 4 கட்சிகள் இடையேதான் போட்டி நிலவுகிறது. தோ்தலுக்கு இன்னமும் 14 நாள்களே உள்ள நிலையில், பிரசாரத்தின் தீவிரத்தைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.

கோரிக்கைகள்: மயிலாடுதுறை நகராட்சியை பிரதானமாக கொண்ட மயிலாடுதுறை தொகுதியில் பல ஆண்டுகளாக தீா்க்கப்படாத பிரச்னையாக உள்ள புதைசாக்கடை திட்டத்துக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கை. விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டு விளங்கும் இத்தொகுதியில், விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்டகால எதிா்பாா்ப்பு.