அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளா்கள் சாா்பில் நடத்தப்பட்ட விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமை வகித்தாா்.
சித்தா்காட்டில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், இணை ஆணையா் சிவக்குமாா், உதவி ஆணையா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் அதிகாரிகள், ஆய்வாளா்கள், செயல் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கலிட்டு, படைத்து வழிபாடு நடத்தினா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், முதுநிலை மண்டல மேலாளா் நளினா தலைமையில், அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
