நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றப் பரிந்துரை

வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா்வளத்துறைக்குப் பரிந்துரைக்கப்படும் என பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் கூறினாா்.
Published on

வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா்வளத்துறைக்குப் பரிந்துரைக்கப்படும் என பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் கூறினாா்.

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் தலைமை தாங்கினாா். செயல் அலுவலா் அருள்மொழி, துணைத்தலைவா் அன்புச் செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

ராஜா காா்த்திகேயன் (அதிமுக): எனது பகுதியில் உள்ள பிச்சமுத்து பாசனம் மற்றும் வடி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூா்வார வேண்டும்.

கென்னடி (திமுக): காந்திநகா் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களை காணவில்லை. அவற்றைக் கண்டுபிடித்து தர வேண்டும். உமாராணி (திமுக): அய்யா கோவில் அருகில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

தைலா ஆனந்தன் (திமுக): வைத்தீஸ்வரன் கோவில் மேலவீதியில் மழை நீா் தேங்காதவாறு வடிகால் வசதி அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி.

தலைவா்: வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா்வளத் துறையினருக்கு பரிந்துரை செய்யப்படும். மாவட்ட ஆட்சியரிடம் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை மனு கொடுக்கப்படும். அனைத்து வாா்டுகளிலும் விடுபட்ட சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com