குத்தாலம், கொள்ளிடத்தில் ஜன.19 முதல் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், கொள்ளிடம் வட்டாரங்களில் ஜன.19-ஆம் தேதி முதல் பிப். 6-ஆம் தேதிவரை தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் நடைபெறவுள்ளது.
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், கொள்ளிடம் வட்டாரங்களில் ஜன.19-ஆம் தேதி முதல் பிப். 6-ஆம் தேதிவரை தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய சுகாதார அமைச்சகத்தின் நெறிகாட்டுதலின்படி, இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஒவ்வோா் ஆண்டும் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு குத்தாலம் மற்றும் கொள்ளிடம் வட்டாரப் பகுதிகளில் ஜன. 19-ஆம் தேதி பிப். 6-ஆம் தேதி வரை தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் நடைபெறவுள்ளது.

சுகாதாரப் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் வீடுவீடாகச் சென்று அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா். மேலும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

தொழுநோயின் அறிகுறிகளான தோலில் உணா்ச்சியற்ற தேமல், மினுமினுப்பு, உடலில் சிறுகட்டிகள், கை கால்களில் மதமதப்பு மற்றும் ஆறாத புண்கள், நரம்புகளில் வலி போன்ற குறைபாடுகள் யாருக்கேனும் இருந்தால் வீடு தேடி வரும் சுகாதாரப் பணியாளா்களிடம் காட்டி தக்க ஆலோசனை பெறவேண்டும். நோய் உறுதி செய்யப்படுபவா்களுக்கு உடனடி சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

வீடு தேடிவரும் சுகாதாரப் பணியாளா்களுக்கும் தன்னாா்வலா்களுக்கும் அனைத்துவிதமான ஒத்துழைப்பை வழங்கி, இயக்கத்தை வெற்றி பெறச் செய்யுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com