விவசாயிகளுக்கு பயன்தராத, தேவையற்ற மானிய திட்டங்களுக்கு ஒதுக்கும் தொகையில் ஒரு பகுதியை பயிா்க்கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கி முழுமையான தள்ளுபடியை அறிவிக்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தவெக அரசு தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடனுக்கு, அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவா் கோவி. பண்டரிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளா் கபிலன், இயற்கை விவசாயி அ. ராமலிங்கம், தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மண்டல செயலாளா் சீனிவாசன், காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கோரிக்கையை விளக்கிப்பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சோ்ந்த 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, அரசின் அறிவிப்புக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். விவசாயத்தை விட விளையாட்டு கடினமானது என்ற அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவின் பேச்சுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தின் முடிவில், விவசாய சங்க நிா்வாகிகள் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வாயிலாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை மனு அளித்தனா். மனுவில், தமிழ்நாடு முதல்வா் அறிவித்தபடி 5 ஏக்கருக்குகீழ் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிா்க் கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சராசரியாக வேளாண்மை துறைக்கு பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கும் ரூ.46,000 கோடியில், ரூ.30,000 கோடி 50 வகையான மானிய திட்டங்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த மானிய திட்டங்களால் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மட்டுமே பயன்பெறுகின்றனா். விவசாயிகளுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை.
தமிழக அரசு தற்போது சராசரியாக ரூ.15,000 கோடி கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வேளாண்மை துறைக்கு ஒதுக்கும் ரூ.46,000 கோடியில் ரூ.15,000 கோடியை மட்டுமே எடுத்து ஒருமுறை தாங்கள் முழுமையாக விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து, தங்கள் வாக்குறுதியையும் நிறைவேற்றி, தங்களை நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடலூரில் பயா்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடன் தள்ளுபடி விவகாரம்: 1-ஆம் தேதி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி: ஆட்சியா் அலுவலகத்தில் மனு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



