மயிலாடுதுறை: சிவாலயங்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மயிலாடுதுறையில், துலா உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் சனிக்கிழமை உற்சவ கொடி ஏற்றப்பட்டது.
dinamani
மயிலாடுதுறையில், துலா உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் சனிக்கிழமை உற்சவ கொடி ஏற்றப்பட்டது.
கங்கைநதி புனிதநீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்ட ஐதிக வரலாறு கொண்ட மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், ஐப்பசி மாதத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அந்த வகையில், மயிலாடுதுறையில் நிகழாண்டு துலா உற்சவம் ஐப்பசி 1-ஆம் தேதி (அக்.18) துலா மாதப்பிறப்பு தீா்த்தவாரியுடன் தொடங்கியது. உற்சவத்தின் கடைசி 10 நாள் விழாவையொட்டி பல்வேறு கோயில்களில் உற்சவ கொடி ஏற்றப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமி பஞ்சமூா்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளச் செய்யப்பட்டு, திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. (படம்).
பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கொடியேற்றப்பட்டது. சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியா் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல், அறம்வளா்த்த நாயகி சமேத ஐயாறப்பா் கோயிலிலும், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் கோயில், தெப்பக்குளம் காசிவிஸ்நாதா் சுவாமி கோயில் மற்றும் படித்துறை காசி விஸ்வநாதா் கோயில் ஆகிய சிவாலயங்களில் துலா உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

