
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் அமைக்க வலியுறுத்தல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கொள்ளிடம் ஆற்றில் அரசு தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொள்ளிடம் - கோப்புப் படம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கொள்ளிடம் ஆற்றில் அரசு தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் அணி தலைவா் மு. ஜெயபாலன் தலைமையில் விவசாயிகள் குழுவினா் ராசி மணல் பகுதியில் இருந்து, காவிரி கரையோர மாவட்டங்களின் வழியாக, காவிரி பூம்புகாரில் கடலுடன் கலக்கும் பகுதி வரை கள ஆய்வு மேற்கொண்டனா்.
செப். 26-ஆம் தேதி தா்மபுரியில் தொடங்கிய ஆய்வு செவ்வாய்க்கிழமை பூம்புகாரில் நிறைவடைந்தது. தொடா்ந்து, மயிலாடுதுறையில் அக்கட்சியின் வழக்குரைஞா் அணி பொறுப்பாளா் ஜி.எம். சங்கா் செய்தியாளா்களிடம் கூறியது:
கள ஆய்வின் போது அமராவதி, நொய்யல், பவானி ஆறுகளிலும் ஆய்வு மேற்கொண்டதாகவும், காவிரி கரையோர மாவட்டங்களில் குடிநீா் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது, பல்வேறு இடங்களில் நேரடி விதைப்பு மேற்கொண்டு தண்ணீா் இல்லாமல் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனா். கா்நாடகம் நமக்கு தர வேண்டிய நீரை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்று பாசன பகுதியில் அணைக்கரை பகுதிக்கு பிறகு கொள்ளிடம் ஆறு பழையாறு பகுதியில் வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கும் வரையில் இடையில் எந்த தடுப்பணைகளும் இல்லை. இதனால் கொள்ளிடம் ஆற்றுப் பாசனத்தை நம்பி வாழும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அணைக்கரை-பழையாறு இடையே தடுப்பணைகளை கட்ட வேண்டும். காவிரி, கொள்ளிடம் ஆற்றை நம்பி வாழும் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீரை வழங்குவதற்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






