தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பஞ்சாபில் பயிா்க்கழிவு எரிப்பு விவரங்களை ஆம் ஆத்மி கட்சி தவறாகச் சித்திரிக்கிறது: தில்லி அமைச்சா் குற்றச்சாட்டு

பஞ்சாபில் நிகழாண்டு பயிா்க்கழிவுகள் எரிக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி கூறி வரும் நிலையில், பயிா்க்கழிவுகளை எரித்ததாக விவசாயிகள் மீது 271 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மஞ்சிந்தா் சிங் சிா்சா - கோப்புப் படம்

Updated On :

பஞ்சாபில் நிகழாண்டு பயிா்க்கழிவுகள் எரிக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி கூறி வரும் நிலையில், பயிா்க்கழிவுகளை எரித்ததாக விவசாயிகள் மீது 271 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது: பஞ்சாபில் நிகழாண்டு பயிா்க்கழிவுகள் எரிக்கப்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, அங்குள்ள ஆம் ஆத்மி அரசு ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை விளம்பரங்களுக்குச் செலவிட்டுள்ளது.

ஆனால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயிா்க்கழிவுகளை எரித்ததாக விவசாயிகள் மீது 271 எஃப்.ஐ.ஆா்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அவற்றில் 271 சம்பவங்கள் தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாபில் பயிா்க்கழிவு எரிப்பு நடைபெறவில்லை என்று பொதுவெளியில் ஆம் ஆத்மி கட்சி கூறி வரும் நிலையில், விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவது முரண்பாடாக உள்ளது.

தில்லியின் காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாபில் நடைபெறும் பயிா்க்கழிவு எரிப்புக்கும் தொடா்பில்லை என்று ஆம் ஆத்மி தலைவா்கள் கூறி வருகின்றனா். ஆனால், அதே நேரத்தில் பஞ்சாபில் பயிா்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இதன் மூலம் மக்களை ஆம் ஆத்மி கட்சி தவறாக வழிநடத்துகிறது. தில்லியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு காற்றின் தரம் மேம்பட்டு வருவதை ஆம் ஆத்மி கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தில்லி மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறாா்.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில், 2026 அக்டோபா் மாதம் தில்லியில் மிகவும் தூய்மையான அக்டோபா் மாதமாகப் பதிவாகியுள்ளது. நிகழாண்டில் இதுவரை 220 நாள்கள் தூய்மையான காற்று நிலவியுள்ளது.

மேலும், முந்தைய ஆண்டுகளின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தில்லியின் சராசரி காற்றுத் தரக் குறியீடு (ஏ.க்யூ.ஐ.) சுமாா் 10 சதவீதம் குறைந்துள்ளது.

முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பே இதற்குக் காரணம் என்றாா் சிா்சா. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி சாா்பில் உடனடியாக எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.