/

விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவராணம் வழங்க வேண்டும்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை முன்னாள் உறுப்பினர் கே. சுப்பராயன்.

Updated On :13 மே 2013, 1:28 am IST

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை முன்னாள் உறுப்பினர் கே. சுப்பராயன்.

நாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மேதின விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது :

தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வறட்சியால் பல்வேறு பாதிப்புகளுக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை.

விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

ரூ.2.10 லட்சத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு கட்டுவது என்பது தற்போதைய சூழலில் இயலாத காரியமாக உள்ளது. எனவே, பசுமை வீடுகளுக்கான தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் சாதி பிரச்னைகளை மையமாகக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பெரியார், ஜீவா போன்றவர்கள் பிறந்த தமிழகத்தில் சாதி அரசியல் நிச்சயமாக எடுபடாது.

வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாற்று அரசு அமைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் சுப்பராயன்.

கட்சியின் மாவட்டச் செயலர் எம். செல்வராசு, ஒன்றியச் செயலாளர் டி. செல்வம், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் மல்லிகா, ஏஐடியுசி மாவட்டச் செயலர் கே. ராமன், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் கே. பாஸ்கர், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, வேளாங்கண்ணி சாலை சந்திப்பு அருகே மே தின கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பெரியத்தும்பூர், கருங்கண்ணி, சடையன்கோட்டகம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.