நாகை மாவட்டத்தில் 10 நாள்கள் நீடித்த கனமழையின் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவாடு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதுடன், சுமார் 30 டன்னுக்கும் அதிகமான கருவாடுகள் சேதமடைந்துள்ளன.
அடைமழை காலங்களில், அன்றாட உணவுத் தேவையில் முக்கியத்துவம் பெற்றிருந்த மா வத்தல், கொத்தவரை வத்தல், சுண்டைக்காய் வத்தல், பாகற்காய் வத்தல் போன்ற வத்தல், வடகம் வரிசையில், அசைவப் பிரியர்களின் முக்கிய உணவுத் தேவைகளில் ஒன்றாக இருந்தது கருவாடு.
காலப்போக்கில் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களில், ரத்தக் கொதிப்பு, ஒவ்வாமை போன்ற நோய்கள் மக்களிடையே நீக்கமற நிறையத் தொடங்கியதால், கருவாடு உணவுத் தேவையில் கடந்த 20 ஆண்டுகளாக சரிவு ஏற்பட்டது.
இருப்பினும், அசைவப் பிரியர்களின் உணவுத் தேவைக்காகவும், கோழித் தீவனப் பயன்பாட்டுக்காகவும் கருவாடுகள் உற்பத்தி, விற்பனை இன்றளவும் குறிப்பிடத்தக்க நிலையிலேயே உள்ளது.
மீன்பிடிப்பு சார்ந்த துணைத் தொழில்களில் ஒன்றாக உள்ள கருவாடு தயாரிப்பில் இந்திய அளவில் முதன்மைப் பெற்ற கேரள மாநிலம், தலச்சேரிக்கு அடுத்த நிலையில் இருப்பது நாகை மாவட்டம்.
நாகையில் தயாரிக்கப்படும் கருவாடுக்குப் பரவலான வரவேற்பு இன்றளவும் உள்ளது. மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்ட இம்மாவட்டத்தில், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கருவாடு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாகையிலிருந்து வாரம் தோறும் சுமார் 50 டன் எடையிலான கருவாடுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நெத்திலி, வஞ்சிரம், வாளை, கெளுத்தி என பலவகையான கருவாடுகள், நாமக்கல், சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கோவா, கர்நாடகம் போன்ற இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
அசைவ உணவு எனினும், கருவாட்டின் தரம் குறையாமல் பதப்படுத்துவது என்பது பல நாள் பணியாகவே உள்ளது. மீன்களை அலசி உப்பு தடவி, குறிப்பிட்ட நாள்கள் இளம் வெயிலிலும், அதற்கடுத்து கடுமையான வெயிலிலும் உலர்த்தி, ஈரம் படாமல் பாதுகாத்து விற்பனை செய்யும் போதுமட்டுமே உரிய விலையைப் பெற முடியும் என்ற வகையில், இயற்கையின் துணை இத்தொழிலுக்கு இன்றியமையாததாக உள்ளது.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக நீடித்த கனமழை வேளாண்மையிலும், மீன்பிடித் தொழிலிலும் ஏற்படுத்திய பாதிப்புக்குச் சற்றும் குறையாத அளவில் கருவாடு தொழிலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருவாடு தயாரிப்பு பிரதானமாக நடைபெறும் நாகை கடுவையாற்றுக் கரையோரப் பகுதிகளில் கரைபுரண்ட வெள்ளம், கருவாடு உலர்த்தும் இடங்களையும், பாதுகாக்குமிடங்களையும் சூழ்ந்தது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கருவாடுகள் கடுவையாற்றுக் கரையிலேயே அழுகி வீணாகியுள்ளன.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன்னுக்கும் அதிகமான கருவாடுகளுடன், கருவாடு தயாரிப்புக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன்னுக்கும் அதிகமான மீன்களும் வெள்ளம் சூழ்ந்து, அழுகி சேதமடைந்திருப்பது கருவாடு வியாபாரிகளை நிலைகுலையச் செய்துள்ளது.
களம் கோரும் கருவாடு வியாபாரிகள்: இதுகுறித்து நாகையில் கருவாடு பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேசியதிலிருந்து....
வட்டிக்கும், மகளிர் குழுவிலும் நாங்கள் கடன் வாங்கி, மீனைக் கொள்முதல் செய்து கருவாடு தயாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், 10 நாள்களாகப் பெய்த கனமழை கருவாடு தொழிலை முழுமையாக சீரழித்துள்ளது. விற்பனைக்குத் தயாராக இருந்த கருவாடுகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி, வீணாகியுள்ளன.
இதைத் தவிர, கருவாடு தயாரிப்புக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த மீன்கள் வெள்ளத்தில் அழுகி, கரைந்துள்ளன. கருவாடு கொட்டகைகள் அனைத்தும் மழையில் முழுமையாக சேதமடைந்துள்ளன.
கடுவையாற்றுக் கரையோரத்தில் உள்ள பயன்பாடற்ற இடம் தான் தற்போது கருவாடு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது மேட்டுப்பாங்கான இடமாக இல்லாததால், ஆண்டு தோறும் மழை, வெள்ளம் காலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கருவாடுகள் சேதமாவது வழக்கமாக உள்ளது. எனவே, நாகையில் கருவாடு உலர்த்துவதற்கென மேட்டுப்பாங்கான களத்தை ஏற்படுத்தித் தர வேண்டும், கருவாடு சேதத்துக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர்.
கருவாடு தயாரிப்புத் தொழிலில் முதன்மைப் பெற்றுள்ள நாகையில், கருவாடு உலர்த்தவும், பாதுகாப்பாக வைக்கவும் மேட்டுப்பாங்கான தனி களமும், பாதுகாப்பு இடமும் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால், வருங்காலங்களிலாவது கருவாடு தொழில் கடுமையான நஷ்டத்தை சந்திக்காமல் இருக்கும் என்பது கருவாடு தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.