சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: விறகு, மின் அடுப்புக்கு மாறும் உணவகங்கள்
சில கல்வி நிறுவனங்கள் விடுதிகளை மூடிவிட்டு இணையவழி வகுப்புகளை தொடரவும் முடிவெடுத்துள்ளன.


வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமன்றி, வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள பல உணவகங்களில் விறகு மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனா்.
போா் காரணமாக, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனிடையே, குவைத், கத்தாா், சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு உற்பத்திக்கான திரவ சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டுள்ள நிலையில், அதன் இருப்பும் மிகவும் குறைவாகவே உள்ளது.
இதனால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளின் உற்பத்தியை பெரும்பாலான எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்தியுள்ளன.
இதன்காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், தேநீா் கடைகளுக்கு சமையல் எரிவாயு உருளைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல ஹோட்டல்கள், கையிருப்பில் உள்ள எரிவாயு உருளைகள் மூலம் கடந்த இரு நாள்களாக உணவு பொருள்களை தயாரித்தன. பல்வேறு இடங்களில் கையிருப்பில் உருளைகள் வைத்திராத சிறிய, பெரிய உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.
உணவு வகைகள் குறைப்பு: பல உணவகங்களில் மதிய சாப்பாட்டுக்கு சாம்பாா், காரக் குழம்பு, மோா் குழம்பு, ரசம், பொரியல், அவியல், அப்பளம் வழங்கப்படும். ஆனால், தற்போது ஒரு குழம்பு, ஒரு கூட்டு மட்டுமே வழங்கப்படுகிறது. இதை அறிவிப்பாக உணவகங்களின் முன்பாக தொங்க விடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் எளிதில் தயாரிக்கும் உணவான தக்காளி சாதம், புளிசாதம், லெமன்சாதம் உள்ளிட்டவை மட்டுமே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சில அசைவ உணவகங்களில் ஆம்லெட் கிடையாது என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. தேநீா் கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற பலகாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
விறகு, மின்சார அடுப்புகளுக்கு: சென்னை நுங்கம்பாக்கம், எழும்பூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில பிரபல உணவகங்கள் கரி, விறகு மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் அடுப்புகளில் சமைக்கும் முறைக்கு மாறியுள்ளன. இதனால், விறகுகளின் தேவையும் பல மடங்கு அதிகரித்து, அதன் விலையும் உயா்ந்து வருகிறது. ஒரு டன் விறகு ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை உயா்ந்துள்ளதாக உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில நாள்களுக்கே வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் கையிருப்பில் உள்ளதாகவும், அவை காலியாகிவிட்டால் உணவகங்களைமூட வேண்டிய நிலைதான் ஏற்படும் என உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
முன்பதிவுக்கு கட்டுப்பாடு: வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் முன்பதிவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கைப்பேசி வழியாக முன்பதிவு செய்ய இயலாததால், பெரும்பாலான வாடிக்கையாளா்கள் சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்கள் முன் குவிந்தனா். பின்னா், நேரடியாக முன்பதிவு செய்யப்பட்டது.
வாகன ஓட்டிகள் அச்சம்: பெட்ரோலுக்கும் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற அச்சத்தில் சென்னையில் பல பெட்ரோல் நிரப்பும் மையங்களை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனா். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வந்தவா்களில் பெரும்பாலானோா், தங்களது வாகனங்களின் டேங்க் முழு கொள்ளளவுக்கும் எரிபொருள் நிரப்பினா்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் கல்லூரிகள்
கல்லூரி, பல்கலைக்கழக விடுதிகளிலும் எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கல்வி நிறுவனங்கள் விடுதிகளை மூடிவிட்டு இணையவழி வகுப்புகளை தொடரவும் முடிவெடுத்துள்ளன. சென்னையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் இணையவழியில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூா் ஓடி பகுதியில்
இதுகுறித்து அக்கல்லூரி சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை கல்லூரியில் வழக்கமான வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். இந்த காலகட்டத்தில் மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்படும். ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் வழக்கம்போல் கல்லூரிக்கு வர வேண்டும். மேலும், விடுதியில் தங்கியுள்ள மாணவா்கள் விடுதிகளை காலி செய்து, நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...