மயிலாடுதுறையில் முஸ்லிம் மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையும், நாகை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்து, 96 முஸ்லிம் மகளிருக்கு ரூ. 9.99 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிக்கான காசோலைகளை வழங்கினார். மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கெளரவ இணைச் செயலாளர் பி.ஏ. முஹம்மது சுல்தான் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது: நாகை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு கடந்த 5.3.2008 முதல் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலம் பெறப்படும் நன்கொடைக்கு ஈடாக 1-க்கு 2 என்ற விகிதத்தில் அரசு இணை மானியம் வழங்குகிறது.
இச்சங்க உறுப்பினர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டில் நாகை மாவட்டத்தில் 100 முஸ்லிம் மகளிருக்கு ரூ.10.12 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தற்போது 96 மகளிருக்கு ரூ. 9.99 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா. காமராஜ், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பி. வைதேகி, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், வட்டாட்சியர் விஜயராகவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கெளரவச் செயலாளர் எல்.கே.கே. லெப்பை தம்பி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








