பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ விடுத்த அழைப்பின் பேரில், நாகை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 8 ஆயிரம் பேர் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; 3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்; சமூக நீதிக்கு எதிரான அரசாணை எண்-56-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசுத் துறை ஊழியர்கள் சுமார் 17,200 பேர் பணியாற்றி வரும் நிலையில், சுமார் 8 ஆயிரம் பேர் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்தன. ஒரு சில பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு வந்த நிலையிலும், மாணவர்கள் வருகையில்லை. மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களைக் கொண்டு இயங்கின.
ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் ஊழியர்களின் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. வருவாய்த் துறை மூலமாக சான்றுகளைப் பெற வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை இருந்தது.
ஆர்ப்பாட்டம்...
வேலை நிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ - ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எழிலரசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ப. அந்துவன்சேரல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மு. லெட்சுமிநாராயணன், ஏ.டி. அன்பழகன், பா. ரவி, வை. நாகராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கா. மீனாட்சிசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிறைவுரையாற்றினார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
சீர்காழியில்...
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் எல். பிரேமசந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரிய கழக மாநிலத் தலைவர் என். அசோக்குமார், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொறுப்பாளர் காசி. இளங்கோவன், பட்டதாரி ஆசிரியர் கழக பொறுப்பாளர் கோவி. நடராஜன், தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி தங்க. சேகர், ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஸ்டாலின் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு ஊழியர்கள், ஊராட்சிச் செயலர்கள் பங்கேற்றனர். இதனால், பழையப் பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜாக்டோ-ஜியோவினரின் வேலை நிறுத்தத்தினால் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் இயங்கின. ஆனால், சீர்காழி நகரில் உள்ள ஓர் அரசு உதவிப்பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்று பாடங்களை நடத்தினர்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யத்தில் ராஜாஜி பூங்கா எதிரே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
குத்தாலத்தில்...
குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு பொறுப்பாளர் மு. கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், வருவாய்த் துறை அலுவலர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 500 பேர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
செம்பனார்கோவிலில்...
பொறையாறு அருகே செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கட், மதியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

வாலாஜா அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 93 % தோ்ச்சி

கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவம்

ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு: மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


