கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நாகை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சங்கத் தலைவர்ஆர்.எம்.பி. ராஜேந்திர நாட்டார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: கஜா புயல் சீற்றத்தால் மீனவர்களின் வீடுகள், படகுகள் மற்றும் மரங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. புயலால் வீடுகளை இழந்த மக்கள் இதுவரை வீடுகளை சரிசெய்ய முடியாமல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விசைப்படகு மற்றும் கண்ணாடி நாரிழைப் படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நிவாரணம் கோரி தமிழக முதல்வர், மீன்வளத் துறை, ஜவுளித் துறை அமைச்சர்கள், நாகை மாவட்ட நிர்வாகம் ஆகியோரிடம் ஏற்கெனவே கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்புகளைப் பார்வையிட்ட தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கடல்நீர் உட்புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகள், முற்றிலும் வீட்டை இழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இது வெற்று அறிவிப்பாகவே உள்ளது. இதுநாள் வரை பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை. மீனவ சமுதாய மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மீனவ சமுதாய மக்களின் நலன் கருதி வீடுகள், விசைப் படகுகள் மற்றும் கண்ணாடி நாரிழைப் படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நாகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







