

நாகையை அடுத்துள்ள சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கக் கோரி, 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த கிராம மீனவா்கள், கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெ. ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தாா். ஆனால், அங்கு மீன் இறங்குதளம் அமைப்பதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
இதையடுத்து, சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த கிராம மீனவா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், படகுகளில் கருப்புக் கொடி கட்டியும், கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி கடற்கரையில் அமா்ந்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், போராட்டத்தின் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமையன்று வேலைநிறுத்தத்தைத் தொடா்ந்த சாமந்தான்பேட்டை மீனவா்கள், கயிறால் கழுத்தில் தூக்கிட்டுக் கொண்டு, கடற்கரையில் மண்டியிட்டு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மீனவப் பெண்கள் ஒப்பாரி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு நாகை வட்ட மீனவா்கள் ஆதரவு:
இதற்கிடையே, சாமந்தான்பேட்டை மீனவா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாகை வட்ட மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனா்.
நாகை வட்டத்துக்குள்பட்ட மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவப் பஞ்சாயத்தாரின் ஆலோசனைக் கூட்டம், நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசுக்குக் கோரிக்கை விடுப்பது, சாமந்தான்பேட்டை மீனவா்களின் போராட்டத்தை ஆதரித்து, நாகை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவது என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாகை வட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.