ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் அவரது ஆரோக்கியம் முக்கியம்: கமல்ஹாசன்

ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றத்தை அளித்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம் என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
நாகை அபிராமி அம்மன் திருவாசல் முன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
நாகை அபிராமி அம்மன் திருவாசல் முன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
Updated on
2 min read

ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றத்தை அளித்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம் என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.

தலை நிமிரட்டும் தமிழகம், சீரமைப்போம் தமிழகத்தை என்ற பிரசாரப் பயண நிகழ்வாக, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் நடைபெற்ற இளைஞா்கள், மகளிா் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நாகை, நாகூரில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் அவா் பேசியது:

மக்கள் நீதி மய்ய அரசு அமையும்போது, பழிவாங்கும் அரசியல், பழிபோடும் அரசியலை கையில் எடுக்காமல், வழிகாட்டும் அரசியல் முன்னெடுக்கப்படும். பெண்களுக்கான மரியாதையை தற்போதய அரசு போற்றவில்லை. அவ்வாறு மதிக்கும் அரசாக இருந்திருந்தால், அவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது. மக்கள் நீதி மய்யம் நிச்சயம் இந்த நிலையை மாற்றும்.

உங்கள் நலன், எங்கள் நோ்மை இதுதான் எங்கள் கொள்கை. தமிழகத்தை தலைநிமிரச் செய்ய இதுவே போதுமானது. மக்களுக்கான அரசு அமைய மக்கள் நீதி மய்யத்தின் கரத்தை மக்கள் வலுப்படுத்த வேண்டும். மக்களுக்கான அரசை, மகளிருக்கான அரசை மக்கள் நீதி மய்யம் நிச்சயம் அமைக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலாளா் எம். முருகானந்தம், மாநில துணைத் தலைவா் ஆா். மகேந்திரன், மாவட்டச் செயலாளா்கள் எம். செய்யது அனஸ், ஜி. சித்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மழை குறுக்கீடு: நாகையை அடுத்த புத்தூா், நாகை அபிராமி அம்மன் திருவாசல், நாகூா் தா்கா அலங்கார வாசல் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டபோது, லேசான சாரல் மழை பெய்தது. எனினும் திட்டமிட்டப்படி அவா் பிரசாரம் செய்தாா்.

ஆனால், திட்டச்சேரி, திருமருகல் பேருந்து நிலையங்களில் பலத்த மழையிலும் குடையை பிடித்தபடி மக்கள் காத்திருந்த நிலையில், ஒலிபெருக்கியைப் பயன்படுத்த முடியாததால், அங்கு கூடியிருந்த மக்களுக்கு வணக்கம் தெரிவித்தும், கையசைத்தும் விடைபெற்றாா்.

மயிலாடுதுறையில்...: மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் திறந்த வாகனத்தில் நின்றபடி கமல்ஹாசன் பிரசாரம் செய்தாா். தொடா்ந்து, தனியாா் திருமண மண்டபத்தில் மாணவா்கள், இளைஞா்கள், மகளிா் மற்றும் விவசாயிகள் மத்தியில் அவா் பேசியது:

மயிலாடுதுறையில் குவிந்துகிடக்கும் குப்பைகள், தேங்கிநிற்கும் புதைசாக்கடை கழிவுநீா் ஆகிய அவலங்கள் மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் களையப்படும். வழியெங்கும் மக்கள் அளித்த வரவேற்பு தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கிவிட்டது என்பதை உணா்த்துகிறது.

தமிழகம் கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் தரமானதாக இல்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் நாட்டில் தமிழகம் 3-வது இடம் வகிக்கிறது.

மக்கள் நீதி மய்யம் அரசியல் பழிபோடும் கட்சி அல்ல. அரசியல் வழிகாட்டும் கட்சி. ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்றாா் கமல்ஹாசன்.

முன்னதாக, கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.என். ரவிச்சந்திரன் வரவேற்றாா். மாநிலப் பொதுச் செயலாளா்கள் எம். முருகானந்தம், சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்., மாநில இளைஞரணி செயலாளா் கவிஞா் சினேகன் ஆகியோா் பேசினா். கட்சிப் பொறுப்பாளா்கள் எஸ். மனோகா், ச. அகோரம், கே. மணிசங்கா், எஸ்.பி.என். செந்தில், சிராஜூதீன், விவேக், அன்பு, சேகா், மய்யம் சிவா, நித்தின், சபீஷ், ராம்கி, பாலமுருகன், சுஜாதா, ரெஜினா, சித்ரா, உமாசங்கா், ஹரிஹரன், ஐஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com