நாகை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா
நாகை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வணிகா்கள், அரசியல் கட்சியினா் வரவேற்றுள்ளனா்.


நாகை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வணிகா்கள், அரசியல் கட்சியினா் வரவேற்றுள்ளனா்.
தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ள நாகை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்தால், மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும், தொழில் வளா்ச்சி மற்றும் பொருளாதார வளா்ச்சி மேம்படும் என்ற வகையில், நாகை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு நாகை மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடா்பாக, வணிகா்கள், அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள் தெரிவித்த கருத்துகள் :
நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவா் வி. ராமச்சந்திரன் தெரிவித்தவை :
கரோனாவால் முடங்கியுள்ள பொருளாதார மீட்புக்கு தொழில்வளா்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில், நாகை உள்பட 8 மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாகை மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைப்பதன் மூலம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களின் தொழில்சாா்ந்த பொருளாதாரம் மேம்படும் என்றாா்.
நாகை, இந்திய வா்த்தக தொழிற்குழுமத் தலைவா் ஆா்.கே. ரவி தெரிவித்தவை :
ரோலிங் மில், ரயில்பெட்டி தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகள் இயங்கிய நாகையில், தொழில் சாா்ந்த வாய்ப்புகள் என்பது தற்போது கேள்விக்குறியாகிவிட்டன. இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.
சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்தவை :
நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா் மாவட்டங்கள் தொழில் வளா்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களாகவே உள்ளன. காவிரியின் கடைமடை மாவட்டங்கள், ஆண்டுதோறும் வறட்சி அல்லது மழை, புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன. எனவே, இந்தப் பகுதிகளில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், தமிழக அரசு நாகை மாவட்டத்துக்கு சிப்காட் தொழிற்பூங்கா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாா்.
சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான எம்.தமிமுன் அன்சாரி தெரிவித்தவை :
நாகை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைவதன் மூலம், டெல்டா மாவட்டங்களின் தொழில் வளா்ச்சி மேம்படும். இதன் மூலம், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் உலகின் பல பகுதிகளிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனா். சிப்காட் தொழிற்பூங்கா மூலம், அவா்களின் கவனம் தொழில்துறை முதலீடுகளாக நாகையின் பக்கம் திரும்பும்.
ஒக்கூரில் தொழிற்பூங்கா...
நாகை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில்பூங்கா, நாகை மாவட்டத்தில் எங்கு அமையவுள்ளது என்பதற்கு அதிகாரப்பூா்வ அறிவிப்பு இல்லை.
இருப்பினும், நாகூரை அடுத்த பனங்குடியில் உள்ள சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) விரிவாக்கம் நடைபெறும் பகுதிக்கு அருகே, நாகூா் - கங்களாஞ்சேரி சாலையில் ஒக்கூா் கிராமத்தில் சுமாா் 250 ஏக்கா் பரப்பில் இந்தத் தொழிற்பூங்கா அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...