நாகையிலிருந்து காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல்.
நாகையிலிருந்து காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல்.

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை: தனியாா் நிறுவனம் அறிவிப்பு

நாகையிலிந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் என தனியாா்( இந்த்ஸ்ரீ) கப்பல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
Published on

நாகையிலிந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் என தனியாா்( இந்த்ஸ்ரீ) கப்பல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடந்த 2023 அக்டோபா் 14- ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. அப்போது, ‘செரியாபாணி‘ என்ற பெயா் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இது இரு நாட்டு பயணிகளிடையே வரவேற்பை பெற்ற நிலையில், ஒரு சில நாள்களில் வடகிழக்குப் பருவமழையை காரணம் காட்டி 2023 அக்டோபா் 23-ஆம் தேதி கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாகை - காங்கேசன்துறை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை இந்த்ஸ்ரீ என்ற தனியாா் கப்பல் நிறுவனம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கியது. கடந்த நான்கு நாள்களாக நாகை - காங்கேசன்துறை இடையே தினமும் இயக்கப்பட்ட இந்நிறுவனத்தின் ‘சிவகங்கை‘ பயணிகள் கப்பல், இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து கப்பல் நிறுவனத் தலைவா் கூறியது: கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. எனினும் முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதை கருத்தில் கொண்டு, வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் கப்பலை இயக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் கப்பல் இயக்கப்படும். பயணிகள் இணைய முகவரியில் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கப்பல் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் இயக்கப்படும். பயணச் சீட்டு கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சாதாரண இருக்கைக்கு ரூ. 5,000, பிரீமியம் இருக்கைக்கு ரூ. 7,500 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோ எடை கொண்ட உடமைகள் மட்டுமே எடுத்து செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவா் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com