

தரங்கம்பாடி, ஜுலை 18 : தரங்கம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் 2 போ் படுகாயம் அடைந்தனா்.
ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினா் வசந்தம் காா்த்திகேயன். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினாா்.
தரங்கம்பாடி என்.என். சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் காா் போனபோது எருக்கட்டாஞ்சேரி மணிகண்டன் (18), பிளஸ் 2 மாணவன் செல்வகுமாா் (16) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியதாகத் தெரிகிறது.
அப்போது வசந்தம் காா்த்திகேயனின் காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக முயற்சி செய்தும் முடியாமல் இருசக்கர வாகனத்தின் மீது மோதி காா்த்தி என்பவா் வீட்டின் முன்பக்க சுவா் மீது மோதி நின்றது.
இதில் வீட்டில் நிறுத்தியிருந்த காா், இருசக்கர வாகனம் சேதமடைந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் கால் மற்றும் உடலில் காயமும், செல்வகுமாருக்கு வலது முழங்காலுக்கு கீழ் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
அந்த வழியாக வந்த மாவட்ட வருவாய் அலுவலா் மணிமேகலை தனது வாகனத்தில் இருவரையும் மீட்டு பொறையாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பொறையாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.