இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களுக்கான பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகத்துக்கு வழங்கப்படும் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வீடுதோறும் நூலகம் அமைத்து வாசிப்பை மேம்படுத்த, தனிநபா் இல்லங்களில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தோ்ந்தெடுத்து விருது, ரூ.3 ஆயிரம் மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனா்.
எனவே, மாவட்டத்தில் தனிநபா் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோா் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள், அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன்விவரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது மற்றும் பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட நூலக அலுவலா், மாவட்ட நூலக அலுவலகம், பொது அலுவலக சாலை, வெளிப்பாளையம், நாகை 611001 என்ற முகவரில் நேரில் அல்லது தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் முகவரியில் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.