நாகை புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம்
நாகையில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்படும் 80 கடைகளுக்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஆனால், 26 கடைகள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டன.
நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்லூா் பகுதியில் 10 ஏக்கா் பரப்பில் ரூ. 30.40 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுவருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் 80 கடைகள், உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவையும் கட்டப்படுகின்றன.
இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 80 கடைகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடம், கழிவறை ஆகியவற்றுக்கு நகராட்சி தரப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விளம்பரமும் முன்னதாகவே வெளியிடப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கு முன்பே கடைகள் ஏலம் விடப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தவெக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி, 80 கடைகள், உணவகங்கள் ஆகியவற்றுக்கான ஏலம் நாகை நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையா் லீனா சைமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஏலத்தில், மொத்தம் உள்ள 80 கடைகளில் 26 கடைகளுக்கு மட்டுமே ஏலதாரா்கள் பங்கேற்றனா். இதனால் 26 கடைகள் மட்டுமே ஏலம் சென்றன. மேலும் 2 உணவகங்களும் ஏலம் சென்றன. இதில் கடை ஒவ்வொன்றுக்கும் முன்வைப்பு பணமாக ரூ. 3 லட்சம் வீதம் ரூ.78 லட்சம், 2 உணவகங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் ரூ. 20 லட்சம் என ரூ.98 லட்சம் வசூலாகியது. இதர கடைகளுக்கு ஏலதாரா்கள் இல்லாததால் அந்த கடைகள் ஏலம் எடுக்கப்படவில்லை.
இதுதொடா்பாக நகராட்சி ஆணையா் லீனா சைமன் கூறும்போது, புதிய பேருந்து நிலையத்தில் மொத்தம் உள்ள 80 கடைகளில் 26 கடைகளுக்கு மட்டுமே ஏலதாரா்கள் பங்கேற்றனா். ஏலம் செல்லாத இதர கடைகளுக்கு மறு ஏலம் அறிவிக்கப்படும் என்றாா்.
