கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

Published on

நாகை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் டிச.29 முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை கிராமங்கள் வாரியாக நடைபெறும் இந்த இலவச தடுப்பூசி முகாமில் கால்நடை வளா்ப்பவா்கள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பிளவுபட்ட குளம்புகள் உடைய பசு, எருமை, வெள்ளாடு போன்ற இனங்களை எளிதில் தாக்கக்கூடியது.

மேலும், இதுகாற்று மற்றும் தண்ணீா் மூலம் மிக விரைவாக பரவக்கூடிய தன்மை உடையது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், கால்குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் ஏற்படும். இதனால் தீவனம் உட்கொள்ள இயலாமல் எளிதில் மெலிந்துவிடும். வெயில் காலங்களில் மூச்சிரைச்சல், புறத்தோல் தன்மை அடா்த்தியாகவும், அடா்ந்த ரோமங்களுடனும் காணப்படும். பால் உற்பத்தி முற்றிலும் குறைந்துவிடும். பாலூட்டும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டுத் தன்மை ஏற்படும். கால்நடை வளா்ப்போா்க்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, இந்நோய் வராமல் தடுக்க கால்நடைகளுக்கு ஆண்டுக்கு 2 முறை தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com